சென்னை தி.நகரில் வீட்பு முன்பு நின்ற செல்ல நாய் ஜாக்கி காரில் கடத்தல்

30-07-2019 09:40 AM

சென்னை:

சென்னை தி.நகரில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செல்ல நாய் ஜாக்கியை காரில் கடத்திச்சென்ற கால்டாக்சி டிரைவர் உள்பட இரண்டு பேரை போலீசார் சிசிடிவி மூலம் தேடிவருகின்றனர்.

சென்னை, திநகர் வடக்கு உஸ்மான் ரோட்டைச் சேர்ந்தவர் சரத்ரவி (வயது 25). ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் கோல்டர் ரெட்ரீவர் என்ற உயர்ந்த ரகத்தைச் சேர்ந்த நாயை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். அதற்கு ‘ஜாக்கி’ என பெயரிட்டு பாசமாக வளர்த்து வந்தார். 5 வயதாது நிறைந்த ஜாக்கியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் சரத் ரவிக்கு பரிசாக கொடுத்தார். அதன் விலை தற்போதுள்ள மார்க்கெட்டில் ரூ. 40 ஆயிரம். கடந்த 26ம் தேதியன்று வீட்டு முன்பு அமர்ந்திருந்த ஜாக்கியை திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போட்டுப்பார்த்தார். அப்போது கால்டாக்சியில் வந்த நபர் ஒருவர் வெள்ளை நிற டீஷர்ட் அணிந்தபடி ஜாக்கியை தனது மடியில் வைத்து கொஞ்சுவதும் அதற்கு பிஸ்கட் ஊட்டுவதும் தெரியவந்தது. காருக்குள் அமர்ந்திருந்த பெண்ணும் ஜாக்கிக்கு சாப்பாடு ஊட்டியுள்ளார். ஜாக்கி மயங்கியதும் அதனை காரிலேயே கடத்திச் சென்றுள்ளனர் போன்ற விவரங்கள் தெரியவந்தது. இது குறித்து சரத்ரவி பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாக்கியை கடத்திச்சென்ற கால்டாக்சி டிரைவர் மற்றும் அதன் உள்ளே இருந்த பெண் ஆகியோரை தேடி வருகின்றனர்.