பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய பெண் இன்ஸ்பெக்டர்!

29-07-2019 02:20 PM

சென்னை,            

நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப்பெண்ணை, ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தனது போலீஸ் வாகனத்தில் அழைத்துச்சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்து பிரசவம் பார்த்து அவரது உயிரைக்காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனிதநேயப்பணிக்காக பாராட்டுக்கள் குவிகின்றன. 

சென்னை, செகரேட்டரியேட் காலனி சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கீழ்ப்பாக்கம் பகுதியில் இரவுரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கீழ்ப்பாக்கம் ஐரோட்டில் பெண் ஒருவர் பதட்டமான முகத்துடன், நடுரோட்டில் அங்கும் இங்குமாக ஓடியபடி இருந்தார். இதனைக் கண்ட இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அந்த பெண் அருகே சென்று ரோந்து வாகனத்தை நிறுத்தினார். 

அப்போது அந்த பெண் தனது மகள் ஷீலா(வயது 30)வுக்கு, தலைப்பிரசவம் என்றும், பிரவச வேதனையில் அலறித்துடிப்பதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ பிடிப்பதற்காக வந்ததாகவும் கண்ணீருடன் கதறினார். நள்ளிரவு என்பதால் அங்கு வாகனங்கள் எதுவும் வரவில்லை. அந்தப்பெண்ணின் நிலைமையை உணர்ந்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உடனே தனது செல்போனில் இருந்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். 

பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக ஆகியும் ஆம்புலன்சும் வரவில்லை. இதனால் என்ன செய்வதென்று திகைத்தார். இதற்கிடையில் அந்தப் பெண்ணும் என் மகளை எப்படி காப்பாற்றப்போறேனோ, பிரசவ வலியால் துடிக்கிறாளே என அழுது புலம்பியபடியே இருந்தார். ஒரு நிமிடம் கூட  தாமதிக்காத இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை தனது டாடா சுமோ  போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு நம்மாழ்வார்பேட்டை, பாரக்கா ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார்.

அங்கு பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த ஷீலாவை, மெதுவாக அழைத்து வந்து தனது காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார்.  வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் துாரம் சென்றதும் இன்ஸ்பெக்டர் அழைத்திருந்த ஆம்புலன்சும் கீழ்ப்பாக்கம் ஐரோட்டுக்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து ஷீலாவை தனது காரில் இருந்து ஆம்புலன்சுக்கு மாற்றி முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு அந்தப்பெண்ணை பரிசோதனை செய்தபோது அவருக்கு பணிக்குடம் உடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது தெரியவந்தது. உடனே பெண் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு ஷீலா உடனே பிரசவ வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். கொஞ்ச நேரம் தாமதமாக வந்திருந்தாலும் ஷீலாவின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சில நேரத்தில் ஷீலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஷீலாவின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். 

பிரசவ வேதனையில் துடித்த கர்ப்பிணிப்பெண்ணை ஷீலாவை சரியான நேரத்தில் சென்று உதவி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பாராட்டினார். ஷீலாவின் தாய், கணவர் மற்றும் உறவினர்களும் ராஜேஸ்வரிக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் இந்த மனிதநேய செயலை போலீஸ் உயரதிகாரிகளும் பாராட்டினார்கள்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஓட்டப்பந்தய விளையாட்டு வீராங்கனை. சென்னை நகர காவல்துறை சார்பில் பல விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்று அதற்காக கமிஷனர் விஸ்வநாதனிடம் பரிசுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.