சென்னை புழலில் 20 கிலோ குட்கா பான்மசாலா சிக்கியது

28-07-2019 09:19 AM

சென்னை:

சென்னை புழலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 20 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை புழல் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் புழல், லட்சுமிபுரம், சாரதிநகர், 4வது தெருவில் கண்காணித்தபோது அங்கு பான் மசாலா பாக்கெட்டுகளை ரகசியமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து பாக்கெட்டுகளை விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிலோ கூலிப் பான்மசாலா பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட வசந்தகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.