வழிப்பறி, ரைஸ்புல்லிங்கில் கோடிக் கணக்கில் மோசடி: மூன்று பேர் கைது

20-06-2019 07:51 AM

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  வழிப்பறி, ரைஸ்புல்லிங் மோசடியில் ஈடுபட்டு பலரிடம் லட்ச கணக்கில் மோசடி செய்த  மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம், சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (30). இவர், லாரி மூலம் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர், ”இரிடியம்” வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் எனக்கூறி, தன்னிடம் இரண்டு பேர் இரு தவணைகளில் ரூ.50 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாக, கடந்த 17ம் தேதி அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக,  எஸ்.ஐ., சாம்சன் ஜெபதாஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, சுசீந்திரம் சீயோன்புரம் பகுதியை சேர்ந்த, ஜாண் ஆல்வின் பிரபு 35, கணேசபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், தேனி மாவட்டம் குமுளி பகுதியை சேர்ந்த நாகராஜன்,42 உள்ளிட்டோர் மீது, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி டி.எஸ்.பி., பாஸ்கரன் கூறியதாவது : கைதான மூன்று பேரும் கேரளா, புதுச்சேரி, தஞ்சை, கரூர், குமரி, சென்னை ஆகிய பகுதிகளை சேர்ந்த பலரை ஏமாற்றியுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. பழைய செம்பு குடத்தை கையிலோ அல்லது கீழேயோ வைத்தால் அதிர்வை ஏற்படுத்தும் வகையில், குடத்தின் கீழ் பகுதியில் ஒரு மிஷனை பொருத்தி, பலரை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர். இவர்களை நம்பி வந்தவர்களிடம் முதல் தவணை ரூ.10 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த மிகப்பெரிய கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளனர். இதுபோன்ற நபர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றார்.

ரைஸ்புல்லிங்கில் ஏமாற்றி பலரிடம் மோசடி செய்த பணத்தில் ஜாண் ஆல்வின் பிரபு, சொந்த ஊரான சியோன்புரத்தில் சொந்தமாக வீடு கட்டி வந்துள்ளான். ஏற்கனவே, தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு, குண்டாசில் கைதாகி வெளியே வந்தவன்.

இவனது கூட்டாளியான நாகர்கோவிலை சேர்ந்த சதீஷ்குமார், சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பல லட்சம் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளான். இவர்கள் இருவரிடம், கேரளா, புதுச்சேரி, தஞ்சை, கரூர், குமரி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளை சேர்ந்த பலர் கோடி கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். இவர்களின் மோசடியில் பாதிக்கப்பட்ட நபர்கள் எவரும் இது வரை புகார் அளிக்கவில்லை.

சென்னையை சேர்ந்த ரைஸ்புல்லிங் மோசடி கும்பல்களிடம் தொடர்பில் இருந்ததும், ஜாண் ஆல்வின் பிரபு, சதீஷ்குமார் ஆகிய இருவரும், கடந்த 4 ஆண்டுகளாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவரிடம் இருந்து ரூ.14.25 லட்சம் மதிப்பிலான 57 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் ரைஸ்புல்லிங் கும்பலால் ஏமாற்றபட்டு பணத்தை இழந்தவர்கள். பின்னர் இருவரும் யூடிப் மூலம் ரைஸ்புல்லிங் மோசடி பற்றி அறிந்து பலரிடம் கோடி கணக்கில் ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.

எஸ்.ஐ., சாம்சன் ஜெபதாஸ், எஸ்எஸ்ஐ.,க்கள் பால்பாண்டி, மகேஷ்குமார், சுவாமிதாஸ், ஹெட் கான்ஸ்டபிள் லட்சுமணகுமார், ஜெகன் பிரபு தாஸ், ராம்குமார் மற்றும் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சித்தார்த்த சங்கர்ராய் ஆகியோர் தனிப்படையில் இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.