போலீஸ் நிலையம் முன்பு பிளேடால் கழுத்தை அறுத்த வாலிபர்

20-06-2019 07:49 AM

சென்னை:

போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் டார்ச்சரால் அவமானப்பட்டு மனைவி பிரிந்து சென்று விட்டதால் மனம் உடைந்து கழுத்தை அறுத்தாகவும் புகார் கூறியுள்ளார்.

சென்னை நெசப்பாக்கம், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). கூலித் தொழிலாளி இவரது மனைவி சுமித்ரா (25). கார்த்திக் சில குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் தொடர்ந்து கார்த்திக்கை பழைய குற்றவழக்குகள் தொடர்பாக அடிக்கடி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மனைவி சுமித்ராவுக்கும், கார்த்திக்குக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினமும் வீட்டில் சுமித்ராவுடன் தகராறு வெடித்தது. இதனால் அவர் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனமுடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். குடிபோதையில் அவர் சென்னை அஷோக்நகர்  போலீஸ் நிலையம் சென்றார். அங்கு காவல் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு தன்னையும், தனது மனைவியையும் போலீசார் பிரிப்பதாக சத்தம் போட்டு கத்தினார். பின்னர் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டார். இதில் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்ட போலீசார் கார்த்திக்கை உடனே மடக்கிப் பிடித்தனர். அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் முன்பு கார்த்திக் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து பணியில் உள்ள காவலர்களிடம், உயர் போலீஸ் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அசோக்நகர் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.