நான்கு பெண்களை மயக்கி மோசடி திருமணம்: 3வது மனைவி புகாரால் சிக்கிய ஆசாமி கைது

20-06-2019 07:43 AM

சென்னை:

நான் அவனில்லை பட பாணியில் 4 பெண்களை மணந்து மோசடி செய்த ஆசாமி 3வது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சென்னை சாலிகிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அஜித் ஸ்ரீகாந்த் (வய 46). இவரது மனைவி பெயர் தேவிகா (வயது 27). இவர் கடந்த 17ம் தேதியன்று சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘எனது கணவர் அஜித்துடன் எனக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. 6 வயதில் ஒரு மகன் உள்ளான். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக என் கணவர் என்னை பிரிந்து சென்று விட்டார். அவ்வப்போது வந்து மகனைப் பார்த்து விட்டு செல்வார். இந்நிலையில் எனக்கு கடந்த வாரம் கேரளாவில் இருந்து ஜோதி என்ற பெண் போன் செய்து பேசினார். எனது கணவர் கடந்த 1998ம் ஆண்டு ஜோதியை திருமணம் செய்ததாகவும், 18 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதன் பின்னர் 2002ம் ஆண்டு டெலிலா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு அஜித் மூலம் 12 வயதில் ஒரு மகன் உள்ளார். தன்னையும், டெலிலாவையும் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். தற்போது உன்னையும் அவர் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்ற அதிர்ச்சித்தகவல்களை கூறினர். இது குறித்து நான் எனது கணவரிடம் கேட்டபோது, வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். கடைசியாக தற்போது என் கணவருக்கு இன்னொரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரையும் ஏமாற்றி 4வதாக மோசடி திருமணம் செய்து கொண்டதாக அறிகிறேன் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அஜித் ஸ்ரீகாந்த் ஜோதி, டெலிலா மற்றும் தேவிகா ஆகிய மூவரையும் ஏமாற்றி திருமணம் செய்ததும், 4வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து வளசரவாக்கம் போலீசார் அஜித் ஸ்ரீகாந்த்தை நேற்று கைது செய்தனர். விசாரணைக்குப்பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.