அரசு அதிகாரி போல நடித்து ரூ. 50 ஆயிரம் அபேஸ்: பெண்ணுக்கு வலை

20-06-2019 07:42 AM


சென்னை:

ஆதாரில் பிழை திருத்தம் செய்யும் அரசு அதிகாரி போல நடித்து வீட்டுக்குள் நுழைந்து டேபிளில் மணிபர்சுக்குள் இருந்த ரூ. 50 ஆயிரத்தை ஆட்டையைப் போட்டுச் சென்ற பலே பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:–

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 36). நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிவதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த பகுதியில் ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றில் பெயர், முகவரி ஏதேனும் பிழை இருந்தால், அதை சரிசெய்ய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்

.இதனை நம்பிய ராஜேஸ்வரி, ஆதார் கார்டில் தங்கள் வீட்டு விலாசம் தவறாக உள்ளது என்று  எழுதி கொடுத்துள்ளார். அந்த பெண்ணும் அவர் எழுதிய பேப்பரை வாங்கி வைத்துக் கொண்டு அடுத்த வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர்  ராஜேஸ்வரி அருகில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார். இதனை கவனித்த அந்த பெண் உடனே ராஜேஸ்வரி வீட்டிற்கு நுழைந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் ராஜேஸ்வரியின் 11 வயது மகன் இருந்துள்ளான். திடுக்கிட்ட அவன் அந்த பெண்ணை நீங்கள் யார்? எதற்காக உள்ளே வந்தீர்கள் என கேட்டுள்ளான். தன்னுடைய ஆடையை சரி செய்ய வீட்டிற்குள் வந்ததாக அந்த பெண்மணி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுவனிடம் பேசிக் கொண்டே இருந்த பெண் அவன கவனத்தை திசை திருப்பி விட்டு அவன் கண் அசந்த நேரத்தில் வீட்டில் டேபிள் மேல் மணிபர்சுக்குள் இருந்த ரூ. 50 ஆயிரத்தை திருடிக் கொண்டு நைசாக அங்கிருந்து நழுவி ஓடிவிட்டார்.

சிறிது நேரத்தில்

கோவிலுக்கு சென்ற ராஜேஸ்வரி வீடு திரும்பினார். டேபிள் மீது இருந்த பர்சுக்குள் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசில் ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண்ணின் உருவம் பதிந்துள்ளதை வைத்து போலீசார் அந்த பலே பெண்ணை தேடிவருகின்றனர். இது போன்ற நுாதன முறையில் திருடும் ஆசாமிகளை நம்பி மோசம் போக வேண்டாம். முன்பின் தெரியாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.