ஐகோர்ட் நீதிபதி பெயரைச் சொல்லி மிரட்டி நகையை அடகு வைக்க முயன்ற நபர் கைது

20-06-2019 07:40 AM

சென்னை:

சென்னை திநகரில் பிரபல நகைக்கடையில் ஐகோர்ட் நீதிபதியின் பெயரை சொல்லி 38 பவுன் நகைகளை அடகாக வைத்து பணம் கேட்டு மிரட்டிய போலி ஆசாமியைப் போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– சென்னை, ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் கண்ணன். சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வெங்கடேஷ் என்பவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. நேற்று முன்தினம் தனது மனைவி லதாவுடன் தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி நகைக்கடைக்கு சென்றார். தான் கொண்டு வந்த 38 சவரன் நகையைக் கொடுத்து அடமானம் வைத்துக் கொண்டு பணம் தரும்படி கேட்டுள்ளார். இங்கு அடமானம் வைப்பது கிடையாது. பழைய நகைகளை வாங்கிக் கொண்டு பணம் வேண்டுமானால் தருகிறோம் என நகைக்கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு கண்ணன் தான் ஐகோர்ட் நீதிபதி ஒருவரிடம் பணிபுரிவதாகவும், தான் குமாஸ்தாவாக பணிபுரியும் வழக்கறிஞர் வெங்கடேசனும், நீதிபதியிடம் ஜூனியராக இருந்தவர் எனவும் நகைக்கடை ஊழியரை மிரட்டியுள்ளார். மேலும் செல்போன் மூலமாக கடையின் உரிமையாளரிடம் நீதிபதியை பேசச்சொல்லட்டுமா எனவும் மிரட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த நகைக்கடை ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மாம்பலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலி ஆசாமி என்பதும், நீதிபதியிடம் வேலை பார்ப்பதாக பொய் கூறி கடை ஊழியர்களை மிரட்டியது தெரியவந்தது. இதனையடுத்து கண்ணன் மீது ஆள்மாறாட்டம், அரசு ஊழியர் என கூறி மோசடிசெய்தது ஆகிய 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் வழக்கறிஞர் வெங்கடேஷ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.