நாகர் அருகே டேங்கர் லாரி பைக் மோதி விபத்து:கட்டட தொழிலாளி பலி

19-06-2019 03:06 AM

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே பைக் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் கட்டட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அவரது மனைவி படுகாயமடைந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :

சுசீந்திரம் அருகே தேரூர் கீழத்தெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம் மகன் மணிகண்டன் (33). கட்டட தொழிலாளி.  அவரது மனைவி மீனா செல்வி (29). மணிகண்டனின் சகோதரர் திருமணம் நடக்க இருப்பதை முன்னிட்டு கணவன் மனைவி இருவரும்  பைக்கில் நாகர்கோவில் வந்துள்ளனர். நாகர்கோவில் வடசேரி அருகே வரும் போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரி பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.  உயிரிழந்த மணிகண்டன் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் அது எவ்விதத்திலும் அவருக்கு பயன்படாமல் உடைந்து போனது. படுகாயமடைந்த மீனாசெல்வி ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணிகண்டன் தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உண்டு. நாகர்கோவில் வருவதை தொடர்ந்து குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்து வந்துள்ளனர். இதனால் அந்த குழந்தை உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.