கடல் அலையில் சிக்கி மாயமான 2 பள்ளி மாணவர்கள் சடலம் கரை ஒதுங்கியது.

19-06-2019 03:03 AM

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு அருகே கடல் அலையில் சிக்கி மாயமான 2 பள்ளி மாணவர்களின் சடலம் இரண்டு இடங்களிலாக கரை ஒதுங்கியது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மண்டைக்காடு அருகே புதூர் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மிக்கேல் நாயகம் மகன் சச்சின் (14), அதே பகுதியை சேர்ந்த ஆன்றனி மகன் ஆன்றோ ரெக்ஷன்( 11), சகாயராஜன் மகன் சகாய ரெஜின் (12) மற்றும் ஸ்டேட்டர் என்ற ரமேஷ் மகன் ரகீத் (13) உட்பட 10 பள்ளி மாணவர்கள் கடற்கரை அருகே உள்ள தென்னந்தோப்பில் கடந்த 16ம் தேதி மதியம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் பந்தை கடல் அலை இழுத்துச் சென்றது. இதை சச்சினும் ஆன்றோ ரெக்ஷனும்  எடுப்பதற்காக குனிந்தபோது திடீரென வந்த ராட்சச அலை இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடனே அவர்கள் இருவரையும் மீட்பதற்காக சகாய ரெஜினும் ரகீதும் கடலுக்குள் சென்றனர். அடுத்து வந்த அலை அவர்களையும் இழுத்து சென்றது. கரையில் நின்ற சக மாணவர்கள் போட்ட சத்தத்தை கேட்டு ஓடிவந்த மீனவர்கள் கடலுக்குள் இறங்கி  நான்கு பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சச்சின் மற்றும் ஆன்றோ ரெக்ஷன் ஆகிய இருவரையும் மீட்டு கரை சேர்த்தனர். மற்ற இருவரையும் மீட்க முடியாமல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீட்கப்பட்ட இருவரையும் ஆட்டோ மூலம் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். இதில் சச்சின் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.  ஆன்றோ ரெக்ஷன் மண்டைக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாயமான சகாய ரெஜின் மற்றும் ரகீது ஆகிய இருவரையும் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், குளச்சல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் பல பிரிவுகளாக 15க்கு மேற்பட்ட பைபர் வள்ளம் மற்றும் கட்டுமரத்தில் கடலுக்குள் சென்று தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சகாய ரெஜின் உடல் சின்னவிளை குருசு பாறை அருகே கரை ஒதுங்கியது. இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6வது வகுப்பு படித்து வந்தார். காணாமல்போன இன்னொரு மாணவன் உடல் நேற்று மதியம் குளச்சல் மீன்பிடித் துறைமுக பகுதியில் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்டது. உடனே அப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் சென்று பிணத்தை மீட்டு கரை சேர்த்தனர். இவர் குளச்சல் தனியார் பள்ளியில் 8வது வகுப்பு படித்து வந்தார். இரு மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடல் அலையில் சிக்கிய நான்கு மாணவர்களில் மூன்று பேர் இறந்த சம்பவம் மண்டைக்காடு புதூரில் கடந்த மூன்று நாட்களாக பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.