எண்ணுார் ரவுடி பிடி ரமேஷூக்கு கள்ளத்துப்பாக்கி வாங்கிக் கொடுத்த ரவுடி பினு கைது

19-06-2019 03:02 AM

சென்னை:

சென்னை, எண்ணுாரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி பினுவை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். ரவுடி பிடி ரமேஷூக்கு கள்ளத்துப்பாக்கி வாங்கிக்கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சென்னை, எண்ணுார் அன்னை சிவகாமி நகரில் கடந்த 8ம் தேதியன்று மதியம் அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடி பிடி ரமேஷ் தனது கூட்டாளிகள் அலெக்சாண்டர், குணா, தேவராஜ் ஆகியோருடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நடந்த தகராறில் அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற வாலிபரை அலெக்சாண்டர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இடுப்பில் காயமடைந்த செந்தில்குமார் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக எண்ணுார் போலீசார் நடத்திய விசாரணையில் அலெக்சாண்டர் பயன்படுத்தியது கள்ளத்துப்பாக்கி எனவும் ரவுடி பிடி ரமேஷ் தனது எதிரியை போட்டுத்தள்ளுவதற்காக வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிடி ரமேஷ், அலெக்சாண்டர், தேவராஜ் மூவரையும் கைது செய்தனர். ரமேஷூக்கு கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது, எங்கிருந்து வாங்கி வந்தான் என்பது குறித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்ட போது அவன் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டான். அந்த துப்பாக்கியை சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி பினு வாங்கிக் கொடுத்ததாகவும், பினு தனக்கு நெருங்கிய கூட்டாளி எனவும் பரபரப்பு  தகவல்களை வெளியிட்டான்.

பினு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு மேல்மலையனுாரில் தனது ரவுடி கூட்டங்களை வரவழைத்து அரிவாளால் கேக் வெட்டி மது விருந்து அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவன். அவனை போலீசார் தேடி வந்த நிலையில் அம்பத்துார் துணைக்கமிஷனர் அலுவலகத்தில் போய்  சரணடைந்தான். அவனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த பினு கோர்ட் உத்தரவுப்படி மாங்காடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப் போடாமல் தலைமறைவானான். அவனை போலீசார் தேடிவந்த நிலையில் சென்னை எழும்பூர் போலீசார் காருக்குள் பதுங்கியிருந்தவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜாமினில் வெளியே வந்தவன் மீண்டும் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவனை கடந்த ஓராண்டாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் எண்ணுார் ரவுடி ரமேஷுக்கு கள்ளத்துப்பாக்கி வாங்கிக் கொடுத்த விவகாரம் தெரியவந்ததும் பினு பதுங்கியுள்ள இடம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொளத்துாரில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்டை போலீசார் நேற்று இரவு பினுவை கைது செய்தனர். அவனை ரகசிய இடத்துக்கு கொண்டு வந்து கள்ளத்துப்பாக்கி குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.