ரூ. 10 லட்சத்தை பறித்துக்கொண்டு அடமானப் பத்திரங்களை தரமறுப்பதாக புகார்

19-06-2019 03:02 AM

சென்னை:

சொத்தை வைத்து ரூ. 10 லட்சம் கடன் வாங்கியதாகவும், கடன் பணத்தை திரும்ப கொடுத்தும் சொத்துப்பத்திரங்களை திரும்ப தர மறுத்து போலீசாரை வைத்து மிரட்டுவதாக ‘ஓட்டல் சரவணபவன் புகழ்’ ஜீவஜோதி சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கடத்திக் கொலை செய்த சம்பவம் கடந்த 2001ம் ஆண்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு விசாரணை முடிந்து ராஜகோபாலுக்கு கோர்ட் ஆயுள்தண்டனை வழங்கியது. அதனை சுப்ரீம்கோர்ட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்தது. தற்போது ஜீவஜோதி 2வது திருமணம் செய்து கொண்டு வேதாரண்யத்தில் வாழ்ந்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக திரைக்கு வராத ஜீவஜோதி நேற்று சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்து டிஜிபி ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது,

‘‘வேதாரண்யத்தில் உள்ள எனது கணவர் தண்டபாணிக்கு சொந்தமான வீட்டை வேதாரண்யம், சேதுரஸ்தாவில் வசிக்கும் வேதராசு என்பவரிடம் ரூ. 10 லட்சத்துக்கு அடமானம் வைத்தோம். அதற்காக பூர்த்தி செய்யப்படாத இரண்டு காசோலைகள் மற்றும் வீட்டுப்பத்திரம் வேதராசுவிடம் கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதியன்று வேதராசுவிடம் வாங்கிய கடன் ரூ. 10 லட்சத்தை திரும்பக் கொடுத்துவிட்டு வீட்டுப்பத்திரத்தை திரும்ப வாங்கிவருவதற்காக சென்றோம். அப்போது பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்திரத்தை எங்களிடம் திரும்பதராமல் வேதராசுவின் ஆட்கள் எங்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். வேதராசுவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். மேலும் என் கணவரின் சகோதரி மீதும் பொய் வழக்கு போட்டு கைது செய்ய முயற்சிக்கின்றனர். போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

புகார் அளித்த பின்னர் ஜீவஜோதி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எனது கணவருக்கு சொந்தமான வீட்டை வேதராசுவிடம் அடமானம் வைத்தோம். அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு திரும்ப கேட்டபோது பத்திரம் தொலைந்து விட்டதாக கூறி எங்களிடம் தகராறில் ஈடுபட்டார். மாறாக நாங்கள் பணத்தை தராமல் பத்திரங்களை பிடுங்கிக் கொண்டதாக எங்கள் மீது பொய்புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர். அனைத்துக்கும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. அதனால் டிஜிபியை சந்தித்து நியாயம் கிடைக்க மனு அளித்துள்ளேன்’’ என தெரிவித்தார்.