திருமண மண்டபத்தில் நகை திருடிய வாலிபர் கைது: நகை மீட்பு

19-06-2019 02:56 AM

சென்னை:

சென்னை வேப்பேரியில் திருமண மண்டபத்தில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.

சென்னை, பல்லாவரம், பசும்பொன் நகர், மோசஸ் தெருவைச் சேர்ந்தவர் கிரேசி ஷுபா எலிசபெத் (வயது 45). இவரது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு சர்ச்சில் மாலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. அப்போது மணப்பெண்ணின் கைப்பை திடீரென காணாமல் போனது. அதனை பெண் வீட்டார் திருமண மண்டபம் முழுவதும் தேடினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் காணாமல் போன கைப்பையை கையில் வைத்து கொண்டு நின்று கொண்டிருந்தார். கைப்பை கீழே கிடந்ததாக கூறி மணப்பெண் வீட்டாரிடம் கொடுத்தார். பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்த போது கைப்பையில் இருந்த 4 பவுன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பாக வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது கைப்பையை கீழே கிடந்ததாக எடுத்துக் கொடுத்த வாலிபர்தான் நகையை திருடியது தெரியவந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்த விமல் (வயது 39) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். விமல் மீது ஓட்டேரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிசிடிவி கேமராக்களை உடைத்ததாக வழக்கு ஒன்று உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் விமலை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.