ரோட்டோரம் கிடந்த தங்க லாக்கெட்:போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

13-06-2019 01:48 AM


மார்த்தாண்டம்:

மார்த்தாண்டம் அருகே  வெட்டுவெந்நியில் ரோட்டோரம் கிடந்த தங்க தாலி லாக்கெட்டை கண்டெடுத்த ஆட்டோ டிரைவர் அதை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

        மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (35). இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தி ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன் ரோட்டோரம் ஒரு தங்க லாக்கெட் கிடப்பதை கண்டுள்ளார். அதை எடுத்து பார்த்தபோது பெண்கள் அணியும் தங்க தாலியின் லாக்கெட் என்பது தெரியவந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தும் யாரும் இதற்கு உரிமை கோரவில்லை. இதைதொடர்ந்து இந்த தாலி லாக்கெட்டின் போட்டோவை எடுத்து ராஜேஷ் சோஷியல் மீடீயாக்களில் ஷேர் செய்தார். ஆனால், யாரும் அவரை தொடர்பு கொள்ளவில்லை.

இதைதொடர்ந்து ராஜேஷ் அந்த தங்க தாலி லாக்கெட்டை மார்த்தாண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதை தொலைத்தவர்கள் போலீசாரை தொடர்பு கொண்டால் அது திரும்ப கிடைக்கும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவரின் நேர்மையை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.