ஐ.பி.எல். தகுதி சுற்று: டெல்லியை வீழ்த்திய சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

11-05-2019 12:48 PM

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட்டில் (நேற்று) 10-5-2019 இரவு 8:00 மணிக்கு நடைபெற்ற 2-வது தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

டெல்லி கேப்பிட்டல் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி


2-வது தகுதி சுற்று

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சந்தித்தது.

டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 147 ரன் எடுத்து அவுட்

‘டாஸ்’ ஜெயித்த சென்னை அணியின் கேப்டன் டோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் இறங்கினார்கள்.

முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வீசினார். முதல் ஓவரின் கடைசி பந்தை பிரித்வி ஷா பவுண்டரிக்கு விரட்டினார்.

2-வது ஓவரில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் ஷிகர் தவான் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார்.

3-வது ஓவரில் பிரித்வி ஷா (5 ரன்) விக்கெட்டை தீபக் சாஹர் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார்.

அடுத்து காலின் முன்ரோ களம் கண்டார்.

 6-வது ஓவரின் 2-வது பந்தில் ஷிகர் தவான் (18 ரன், 14 பந்து, 3 பவுண்டரி) விக்கெட்டை ஹர்பஜன்சிங் கைப்பற்றினார்.

அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், காலின் முன்ரோவுடன் ஜோடி சேர்ந்தார். பவர்பிளேயில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்தது.

8.5 ஓவர்களில்  57 ரன்னாக இருந்த போது ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை அடித்து ஆடிய காலின் முன்ரோ,  வெய்ன் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதிரடி ஆட்டக்காரர் ரிஷாப் பான்ட் களம் கண்டார்.

சென்னை அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி எதிரணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர்.

கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 13 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து அக்‌ஷர் பட்டேல், வெய்ன் பிராவோ பந்து வீச்சில் இம்ரான் தாஹிரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து ரூதர்போர்டு, ரிஷாப் பான்டுடன் இணைந்தார். 15.2 ஓவரில் டெல்லி அணி 100 ரன்னை எட்டியது.  ஷேன் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து கீமோ பால் வந்தார்.  இம்ரான் தாஹிர் வீசிய பந்தை சிக்சருக்கு அடித்தார்,  கீமோ பால் (3 ரன்) வெய்ன் பிராவோ பந்து வீச்சில் போல்டு ஆனார்.

18.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 125 ரன்னாக இருந்த போது தீபக் சாஹர் பந்து வீச்சை அடித்து ஆடிய ரிஷாப் பான்ட் (38 ரன்கள், 25 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெய்ன் பிராவோவிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டிரென்ட் பவுல்ட் (6 ரன், 3 பந்துகளில் ஒரு சிக்சருடன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போல்டு ஆனார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் களம் கண்டனர். முதல் 2 ஓவர்களில் 4 ரன் மட்டுமே வந்தது. 3-வது ஓவரில் பாப் டுபிளிஸ்சிஸ் முதல் பவுண்டரியை விரட்டினார். அதன் பிறகு அவர் அதிரடியாக விளையாடினார். அக்‌ஷர் பட்டேல் பந்து வீச்சில் சிக்சர் தூக்கிய டுபிளிஸ்சிஸ், இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் தொடர்ந்து 3 பவுண்டரி அடித்து கலக்கினார். பவர்பிளேயில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்தது.

பாப் டுபிளிஸ்சிஸ் 37 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதத்தை எட்டினார். ஐ.பி.எல். போட்டியில் அவர் அடித்த 12-வது அரைசதம் இதுவாகும்.

அடுத்த ஓவரிலேயே பாப் டுபிளிஸ்சிஸ் (50 ரன்கள், 39 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் கீமோ பாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 10.2 ஓவர்களில் 81 ரன்னாக இருந்தது.

அடுத்து சுரேஷ் ரெய்னா, ஷேன் வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். 11.5 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்னை கடந்தது. அணியின் ஸ்கோர் 109 ரன்னாக உயர்ந்த போது ஷேன் வாட்சன் (50 ரன்கள், 32 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) அமித் மிஸ்ரா பந்து வீச்சில் டிரென்ட் பவுல்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அம்பத்தி ராயுடு களம் இறங்கினார். சுரேஷ் ரெய்னா (11 ரன்) அக்‌ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனை அடுத்து கேப்டன் டோனி, அம்பத்தி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். டோனி (9 ரன்) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் கீமோ பாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வெய்ன் பிராவோ வந்தார்.

சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

19 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

3 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை அணி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி ஐதராபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.